ஒரு பெரிய பணக்காரன் தன் பெரிய மாளிகையில் தன் மனைவி, குழந்தைகளுடன் எந்த ஒரு குறையுமின்றி சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் மனம் மிகவும் நிம்மதியிழந்து இருந்தது. அதனால் அவன் ஞானத்தை தேடி புறப்பட்டான். அவ்வாறு புறப்படும் போது எப்போதுமே நடந்து தான் எவராயினும் செல்வார்கள். ஆனால் இவன் பெரிய பணக்காரன் என்பதால், தன் குதிரையில் பல ஊர்களுக்கு சென்று பல துறவிகள், ஞானிகள் மற்றும் குருக்களை சந்தித்து, அவர்கள் கால்களில் தங்கத்தையும், வைரத்தையும் வைத்து, தனக்கு ஞானம் தருமாறு வேண்டினான். இருப்பினும் அவர்களால் அவனுக்கு ஞானத்தை தரமுடியவில்லை.


அப்போது அவனிடம் அந்த வழியாக வந்த ஒருவர், இந்த காட்டின் உட்பகுதியில் ஒரு குகையில் ஜென் மாஸ்டர் வாழ்ந்து வருகிறார். அவரிடம் நீங்கள் சென்று உங்கள் பிரச்சனையை சொன்னால், அவர் கண்டிப்பாக தீர்த்து வைப்பார் என்று கூறினார். அவனும் அவரால் முடியும் என்று அவன் கூறியதைக் கேட்டு, ஒரு மூட்டை நிறைய பணத்தை எடூத்துக் கொண்டு, அந்த காட்டின் உட்பகுதியில் அந்த மாஸ்டரை தேடிச் சென்றான். எப்படியோ நீண்ட நாள் அலைச்சலுக்குப் பிறகு, அந்த மாஸ்டரின் குகையைக் கண்டுப்பிடித்து, அவரை வணங்கி தன் பிரச்சனையை கூறினான்.


பின் அந்த மாஸ்டர் அவனிடம், "நீ இங்கே எப்படி வந்தாய்" என்று கேட்டார். அதற்கு அவன் "குதிரையில்!" என்றான். பின் அவர் "அப்படியென்றால் எதற்கு ஞானத்தை தேடுகிறாய், முதலில் உன் குதிரையைத் தேடு!" என்று கூறினார். உடனே அவன் அவரிடம் "என்ன குருவே முட்டாள் தனமாக பேசுகிறீர்கள், என்னிடம் தான் குதிரை இருக்கிறதே, பின் எதற்கு நான் தேட வேண்டும்" என்று சொன்னான்.


பிறகு குரு சொன்னார், "எப்படி உன்னிடம் குதிரை இருக்கிறதோ, அதேப்போல் தான் ஞானமும் உன்னிடமே இருக்கிறது. ஆகவே அதைத் தேடி வெளியே செல்லாமல், உனக்குள்ளேயே தேடி தெரிந்துக்கொள்" என்று கூறி, குகைக்குள் சென்று தியானம் செய்ய, ஆரம்பித்துவிட்டார்.