சென்னை: தி.மு.க., இடையூறுகள், அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறியடித்துக் கடக்கும் வலிமை கொண்டது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காழ்ப்புணர்ச்சி
இது வெறும் ரோடு 'ஷோ' அல்ல. திராவிட மாடல் அரசுக்கும் மக்களுக்கும் உள்ள பிணைப்பைக் காட்டுகின்ற அன்புக் கூடல். நேர்மையான விமர்சனங்களைக் கவனித்துச் சரிப்படுத்த வேண்டிய செயல்களை மேற்கொள்வது என் வழக்கம். காழ்ப்புணர்வின் காரணமாக விமர்சனம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் அவதூறுகளைப் புறந்தள்ளிவிடுவதே என் பழக்கம்.
ஆறாவது முறையாக தி.மு.க., தமிழகத்தை ஆள்கிறது. 7வது முறையும் ஆட்சி அமையும்.மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும் 2026ம் ஆண்டிலும் வெற்றிகரமாகத் தொடர்ந்திட ஜூலை 1 முதல் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான மாபெரும் பரப்புரைப் பயணத்தை நான் தொடங்கி வைக்கிறேன்.
துரோகிகள்
தமிழகத்துக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழக மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழகத்தில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுக்கப்படுகிறது.
தி.மு.க.,வின் பாதை தெளிவானது. பயணம் உறுதிமிக்கது. இடையூறுகள், அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறிடியத்து கடக்கும் வலிமை கொண்டது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
0 கருத்துகள்