நாளை என்பது நம் கையில் இல்லை

  ஒரு ஊரில் ஒரு குட்டிப்பறவை இருந்தது. அது பல இடங்களுக்கும் உணவு தேடி பறந்தது. ஓரிடத்தில், ஒரே ஒரு புழு சுற்றிக்கொண்டிருந்தது. பறவை அதைக் கொத்த முயன்ற போது, புழு பறவையிடம், என்னை மட்டும் சாப்பிட்டு விட்டால், உன் பசி தீர்ந்து விடுமா? சற்று தூரத்தில் நாற்பது, ஐம்பது புழுக்கள் இருக்கின்றன. கொஞ்ச தூரம் பறந்து சென்றால் அவற்றையும் சேர்த்து சாப்பிடலாம், என்றது. இரக்கமில்லாத அந்தப் பறவை, எப்போதோ கிடைக்கப் போகும் நாற்பது, ஐம்பது புழுக்களுக்காக, உன்னையும் விட்டு விட்டால் என்னாகும்? இப்போது, உன்னைத் தின்று பசியாறிக் கொள்கிறேன். பிறகு என் வழியில் நான் செல்கிறேன், என்று சொல்லி, புழுவை விழுங்கி விட்டது.


  கொஞ்ச தூரம் பறந்து சென்று ஓரிடத்தில் அமர்ந்தது. அது அமர்ந்த இடம் ஒரு வலை. அதில் இருந்து மீள முடியவில்லை. வேடன் அதை தூக்க வந்தான். பறவை அவனிடம், வேடனே! நான் சாதாரண குஞ்சுப்பறவை. என்னிடம் என்ன இறைச்சி இருக்கும்! என்னுடன் வா! என் இருப்பிடத்தில் பல கொழுத்த பறவைகள் உள்ளன. அவற்றைப் பிடித்துச் சென்றால், உனக்கு நிறைய இறைச்சி கிடைக்கும் என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தது. அட பறவையே! நாளை கிடைக்கப்போகும் பலாக்காய்க்காக, இன்று கிடைக்கும் கிளாக்காயை எவனாவது விடுவானா? ஹூம்... இன்றைய உணவையே நான் பார்க்கிறேன், நாளைக்குரியதை, அந்த நாராயணன் பார்த்துக் கொள்வான், என்றவன், பறவையின் கழுத்தை திருகி விட்டான்.