ஜோடிக் காக்கை - சிறு கதைஓர் ஊரில் பணக்காரன் ஒருவன் இருந்தான், அவன் ஒருநாள் தூங்கி எழுந்ததும் விடியற் காலையில் ஜோடியாக உள்ள காக்கைகளைக் கண்டால் அன்றைக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும் என்று கேள்விப்பட்டு அறிந்தான். தான் ஜோடிக் காக்கைகளைக் காலையில் எழுந்ததும் காண வேண்டும் என்ற எண்ணம் கொண்டான்.


அவ்வாறு எண்ணம் கொண்ட அப்பணக்காரன் தன் வேலைக்காரனை அழைத்து நீ விடியற் காலையில் ஜோடிக் காக்கைகளைப் பார்த்து வந்து என்னை எழுப்பு என்று கூறினான்.அவ்வேலைக்காரன் மறுநாள் விடியற் காலையில் ஓர் இடத்தில் ஜோடிக் காக்கைகள் இருப்பதைப் பார்த்தான், உடனே ஓடிச் சென்று தன் எஜமானை எழுப்பினான்.


அப்பணக்காரன் படுக்கையிலிருந்து எழுந்து சென்று பார்க்கும் பொழுது அங்கே ஒரு காக்கை மட்டுமே இருந்தது.ஒரு காக்கையை மட்டும் பார்த்த பணக்காரன் கோபம் கொண்டு மற்றொரு காக்கை பறந்து செல்வதற்கு முன்னால் என்னை வந்து ஏன் எழுப்பவில்லை என்று சொல்லிக் கொண்டே வேலைக்காரனை அடித்தான்.அப்போது அந்த வேலைக்காரந் எஜமானனே விடியற்காலையில் ஜோடிக் காக்கைகளைப் பார்த்தால் எனக்கு உண்டான அதிர்ஷ்டத்தைப் பார்த்தீர்களா? உங்களிடம் அடி வாங்கியதுதான் அதிர்ஷ்டம் என்று கூறினான்.அதைக் கேட்ட பணக்காரன் ஆமாம் என்று சொல்லி அடிப்பதை நிறுத்திவிட்டான்.