ஒரு கிராமத்தில் புத்திசாலியான ஜென் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எந்த ஒரு பிரச்சனையையும் எளிதில் தீர்த்துவிடும் தன்மை உடையவர். ஆகவே அந்த கிராமத்தில் உள்ள மக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவரிடம் சென்று, தங்கள் பிரச்சனையை சொல்லி சரிசெய்து கொள்வர்.


அத்தகைய கிராமத்தில் உள்ள மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை அருகில் உள்ள சந்தைக்கு சென்று வாங்குவது வழக்கம். சந்தை என்றாலே சற்று தூரமாக, சிறு சிறு தெருக்களை தாண்டி தான் செல்ல வேண்டியிருக்கும். மேலும் வாரத்திற்கு ஒரு நாள் "சந்தை நாள்" என்ற ஒன்று இருக்கும். இந்த நாளில் அனைத்து பொருட்களும் கிடைக்கும். அவ்வாறு ஒரு சந்தை நாளன்று மக்கள் அந்த சந்தைக்கு சென்று கொண்டிருந்தனர்.


அந்த நாள் மிகவும் கூட்டமாக இருந்தது. அந்த கூட்டம் சிறு தெருக்கள் வரை நின்றிருந்தது. அதிலும் மக்கள் அந்த சந்தைக்கு செல்லும் போது எப்போதும் ஒரே தெருவில் தான் செல்வார்கள். அந்த நாளன்று அந்த தெருவின் முனையில் ஒரு முரட்டுக்குதிரை இருந்தது. மக்கள் சந்தைக்கு செல்ல வேண்டுமென்றால், அந்த குதிரையை கடந்து தான் செல்ல வேண்டியிருந்தது. அந்த குதிரையின் பக்கத்தில் சென்றால், குதிரையின் முரட்டுத்தனத்தை பார்த்து, அப்படியே அந்த இடத்தில் நின்று மக்கள் எவ்வாறு அந்த குதிரையை அந்த இடத்தில் இருந்து அகற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.


அந்த நேரத்தில் அந்த ஜென் துறவியும் அந்த சந்தைக்குச் செல்வதற்கு வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்த மக்கள், அந்த துறவியிடம் தங்கள் பிரச்சனையை சொன்னார்கள். அந்த துறவி "அப்படியா?" என்று சொன்ன படியே, வந்த வழியாக திரும்பி சென்று, மற்றொரு தெருவின் வழியாக சந்தைக்கு சென்றார்.