வெள்ளை குதிரை
ஒரு நாள் காலை ஒருவன் மிகப் பதற்றத்துடன் ஒரு டாக்டரிடம் வந்தான். டாக்டர், இன்று காலை தெரியாமல் ஒரு குதிரையை விழுங்கி விட்டேன். டாக்டர் கேட்டார், என்னப்பா இது, யாராவது குதிரையை விழுங்குவார்களா? ஈயை வேண்டுமானால் விழுங்கி இருப்பாய்.
என்ன டாக்டர், குதிரைக்கும் ஈக்கும் வித்தியாசம் தெரியாதவனா நான். குதிரை வயிற்றில் இருந்து கொண்டு உதைக்குது. ஏதாவது உடனே செய்யுங்கள். என்றான் வந்தவன். மனோதத்துவரீதியில் தான் இவரைக் குணப்படுத்த வேண்டும் என முடிவு செய்த டாக்டர், உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து சென்று மயக்க மருந்து கொடுத்தார்.
தனது உதவியாளரைக் கூப்பிட்டு, பக்கத்திலுள்ள குதிரை பயிற்சி நிலையத்திலிருந்து ஒரு குதிரையை வாடகைக்கு எடுத்து வந்து நோயாளி இருந்த அறை ஜன்னலுக்கு அருகில் இருந்த ஒரு மரத்தில் கட்ட ஏற்பாடு செய்தார். மயக்கம் தெளிந்து அவன் எழுந்த போது, டாக்டர், இதோ, இந்த குதிரை தான் உன் வயிற்றில் இருந்தது. அதை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்து விட்டேன். இப்போது உனக்கு திருப்தியா? என்று கேட்டார்.
ஐயயோ டாக்டர். இக்குதிரை பழுப்பு நிறத்தில் அல்லவா இருக்கிறது? நான் விழுங்கிய குதிரை வெள்ளை நிறம் என்றான். டாக்டர் மயங்கி விழுந்தார்.
பயம்
ஓர் ஊரில் ஒரு குடியானவன் தன் மனைவி மகனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் தன் மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். அவளை அதிகமாக நேசித்தான். இப்படி சந்தோஷமாக இருக்கும் பொழுது அவன் மனைவியை ஒரு பாம்பு கடிக்க அவள் இறந்துவிட்டாள். இந்த நிகழ்ச்சியை அந்த மனிதனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அளவிற்கு அதிகமாக உருண்டு பிரண்டு அழுதான். ஊர் மக்கள், தன் மனைவியைச் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரிக்க வேண்டும் என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மேலும் அழுதான்.
அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லாமல் அவனைச் சமாதானப்படுத்தி சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று அந்தப் பிணத்தை எரித்தார்கள். அவனால் தாள முடியாமல் அங்கேயே உருண்டு பிரண்டும் கத்தி அழுதான். சரி இவன் அழுது அழுது தன்னைத் தானே சமாதானமாக்கிக் கொள்ளட்டும் என்று அவனை அங்கேயே விட்டுவிட்டு ஊர் மக்கள் சென்று விட்டார்கள். மனிதன் தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொண்டால் தான் முழு ஆறுதல் அடைந்த திருப்தி பெறுவான்.
அவனும் அன்று இரவெல்லாம் அந்தச் சுடுகாட்டில் கத்தி அழுது கொண்டிருந்தான். அவன் அழுது கொண்டிருந்த இடத்தில் ஒரு மரம் இருந்தது. அதில் ஓர் அம்மா பேயும் ஒரு குட்டிப் பேயும் இருந்தது. இந்த மனிதன் கத்தி அழுதுக்கொண்டே இருந்ததால் அந்தக் குட்டிப் பேய்கு தூக்கம் வரவில்லை.
அதனால் அது கோபமாகத் தன் தாயிடம் அம்மா... அந்த ஆள் அழுவதால் எனக்குத் தூக்கம் வரவில்லை. நீ போய் அவனை பயமுறுத்தி துரத்திவிட்டு வா... என்று சொன்னது. அதற்கு அம்மா பேய்... வேண்டாம். அந்த மனிதன் இப்பொழுது அதிக கவலையில் இருக்கிறான். இந்த நேரத்தில் அவன் கவலை மட்டும் தான் அவனுக்குப் பெரியதாகத் தெரியும். இந்த நேரத்தில் நாம் போய் பயமுறுத்தினாலும் அவன் பயப்பட மாட்டான் என்றது. இந்தக் கூற்றை குட்டிப்பேய் ஏற்கவில்லை. எவ்வளவு பெரிய மனிதனானாலும் நிச்சயம் ஒரு பேயிக்கு பயந்து தான் போவான். நான் போய் அவனைத் துரத்துகிறேன் என்று சொல்லிவிட்டு அவன் எதிரில் வந்து நின்று அவனைப் பயமுறுத்தியது. பலவித பயங்கர சத்தங்களைக் கொடுத்தது. அங்கிருந்த மண் மற்றும் மர இலைகளை அவன் மேல் விழுமாறு செய்தது. மரத்தைப் பயங்கரமாக உலுக்கி அவனைப் பயமுறுத்தப் பார்த்தது.
உம்ம்ம்... ஒன்றிற்கும் அவன் பயப்படவில்லை. அவன் தன் கவலையை நினைத்தே அழுது கொண்டிருந்தான். குட்டி பேயிக்கே சலிப்பு வந்து அவனை விட்டுவிட்டு திரும்பி வந்து பேசாமல் இருந்து விட்டது. இப்பொழுது கொஞ்ச காலம் ஓடிவிட்டது. இந்தக் குடியானவன் தன் ஊர் மக்கள் சொன்னார்கள் என்று தன் மகனைக் காரணம் காட்டி இன்னொறு பெண்ணை மணந்து கொண்டு புதுப் பெண்ணுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.
ஒரு நாள் வியாபாரத்திற்காக அந்தச் சுடுகாடு தாண்டிப் போக வேண்டியிருந்ததால் அப்பக்கமாகப் போய் கொண்டு இருந்தான். அவனை அந்தக் குட்டி பேய் பார்த்துவிட்டு தன் அம்மாவிடம்....தன் வாழ்நாளிலேயே தான் பார்த்தத் தைரியசாலி இவன் தான் என்றது. அதற்கு அம்மா பேய்... அவன் தைரியசாலி கிடையாது. வேண்டுமானால் இப்பொழுது அவன் எதிரில் நீ போய் சும்மா நின்று பார் என்றது. குட்டிப்பேயும் உடனே அந்தக் குடியானவன் முன் சும்மா வந்து நின்று சிரித்தது. அந்தக் குட்டிப்பேயைப் பார்த்தது தான் தாமதம். அந்தக் குடியானவன் பயந்து வாய் உலறி நடுங்கிப் போய் தலைதெரிக்க ஓடி போனான். குட்டிப் பேய் அம்மாவிடம் வந்து... அன்றைக்கு தான் முழ பலங்கொண்டு பயமுறுத்தியும் பயப்படாதவன் இன்று நான் சாதாரணமாக எதிரில் போய் நின்றதும் பயந்து ஓடியது ஏன்...? என்று கேட்டது.
இதற்கு அம்மா பேய், மனிதன் சந்தோஷமாக இருக்கும் பொழுது தனக்கு ஏதாவது துன்பம் வந்து விடுமோ என்ற பயத்திலேயே வாழ்கிறான். அந்த நேரத்தில் ஒரு சிறிய பயத்தைக் கொடுத்தாலும் அவன் அதிகமாக பயந்து விடுகிறான். இதே கவலையான நேரத்தில் அந்தக் கவலையை விட தனக்கு வேறு துன்பம் இல்லை என்று அரட்டுகிறான். அதனால் மனிதன் அதிக சந்தோஷமாக இருக்கும் பொழுது தான் அவனை மிகச் சாதாரணமாக பயங்கொள்ள வைத்துவிட முடியும் என்றதாம்.
ஐந்து முட்டாள்கள்
ஒரு நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார். நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா? ஆம் மன்னா! அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு என்றார்.
அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, சரி மன்னா என்று ஒத்துக் கொண்டார். ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ?? இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்! என்றார் அமைச்சர். தொடரும் என்றார் மன்னர்.
மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான். இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள் என்றார் அமைச்சர்.
சரி அடுத்து, இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள். களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?
அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள். மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் அடுத்தது என்றார்.
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது என்றார் அமைச்சர். ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை. உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான் என ஒத்துக் கொண்டார் மன்னர். சரி எங்கே முதலாவது முட்டாள்?
அமைச்சர் சொன்னார். மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஃபேஸ்புக்கே குடியேன் வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!.
முடிவு
0 கருத்துகள்