இந்தியா 2020

 இந்தியாவை வரும் 2020-ம் ஆண்டுக்குள் வல்லரசாக்க வேண்டும் என்று அப்துல் கலாம் கனவு கண்டார். அதை நனவாக்கும் நோக்கத்தோடு இந்தியா 2020 என்ற நூலை அப்துல் கலாம் எழுதியுள்ளார். அதில் வல்லரசாகவும், முன்னேறிய நாடாகவும் இந்தியா மாற செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டுள்ளார். ஒரு நாடு சிறந்த, வலிமையான நாடாக மாற வேண்டுமென்றால், கீழ்க்கண்ட துறைகளில் தன்னிறைவு காண வேண்டும் என வலியுறுத்துகிறார். 


1. வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல்


2. மருத்துவம் மற்றும் ஆரோக்கியம்


3. தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பம்


4. அடிப்படை கட்டமைப்பு, தடையற்ற மின்சாரம், சீரான சாலை போக்குவரத்து


5. மிகமுக்கிய உயர் தொழில் நுட்பத்தில் தன்னிறைவு


 தற்போது ஆண்டுக்கு 1. 8% வளர்ச்சி கண்டு வரும் மக்கள் தொகைப் பெருக்கம் 2020-ல் 1. 5% ஆகக் குறையும். 1991ல் 52% என்று கணக்கிடப்பட்ட கல்வி அறிவு 80% ஆக உயரும். பொருளாதார நிலையிலும், சமூக உறவுகளிலும், கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் மத்தியில் கூட்டுறவு வளரும். வளர்ச்சியடைந்த இந்தியா என்கிற நிலையினை நமது தேசம் எட்டிவிடும். 1996- ன் விலை நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது 2007 அல்லது 2008-ல் இந்தியா வறுமையிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 


 இந்த இலக்குகளை எட்ட சில அடிப்படை வளர்ச்சிகள் அவசியம். திறமை வாய்ந்த நம் விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்களை இந்தியா சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நல வாழ்வு, சேவை சார்ந்த துறைகள், உற்பத்தி துறை போன்றவற்றில் நமக்கு இருக்கும் மனித வளம் மிக நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். உணவு உற்பத்தி, உணவு மேம்பாடு, கணினி மென்பொருள் போன்ற துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் மனித வள மேம்பாட்டைக் கூட்டுவதே மிக முக்கிய தேவையாகும். 


 இந்தியா வரும் 2020ல் வல்லரசு நாடாக வேண்டும் என்பது அப்துல் கலாமின் கனவு. அது நிறைவேற அவர் கூறும் யோசனைகள் தான் “இந்தியா 2020 வல்லரசு”க்கான பாதை. கலாமின் கனவை நினைவாக்குவதே அவருக்கு நாம் செலுத்தும் மிகப்பெரிய அஞ்சலி. இது கலாமின் இந்தியா 2020 வல்லரசுக்கான வழிகள்:


2020ம் ஆண்டுக்குள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களின் எண்ணிக்கை பூஜ்யமாக வேண்டும். 


எழுதப் படிக்க தெரிந்தோர் எண்ணிக்கை 100 சதவீதமாக வேண்டும். 


ஒவ்வொரு இந்தியனும் ஒரு பல்கலைக் கழக டிகிரி படிப்பது சாத்தியமாக வேண்டும். 


“இ - கவர்னன்ஸ்” திட்டத்தை அரசு ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு செல்ல வேண்டும். 


ஒவ்வொரு கிராமத்துக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும். 


ஒவ்வொரு கிராமத்துக்கும் குடிநீர், கழிப்பறை மற்றும் சுகாதாரம் கிடைக்க செய்ய வேண்டும். 


சிறந்த செயல்திட்டங்கள் மூலம் தொழிற்சாலைகளை நிறுவி அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். 


இந்தியாவில் வசிக்கும் அனைத்து ஏழைகளுக்கும் மிகக்குறைந்த செலவில் மருத்துவ வசதி கிடைக்க செய்ய வேண்டும். 


இதுவரை அரசு திட்டங்கள் சென்று அடையாத ஏழைகளுக்கு அரசு திட்டத்தின் பலன் சென்றடைய வழிவகை செய்ய வேண்டும். 


விவசாயிகளுக்கு “நபார்டு” மற்றும் வங்கிகள் மூலம் கடன் வழங்கி அவர்களை கடன் சுமையிலிருந்து மீட்க வேண்டும். 


தொழிற்சாலைகள், பல்கலைக் ஆராய்ச்சியாளர், அறிஞர் ஆகியோர் விவசாயிகளுடன் சேர்ந்து உணவு உற்பத்தி, தானியம் பதப்படுத்துதல், விவசாய உற்பத்தி ஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். 


இன்சூரன்ஸ் கம்பனிகள் சிறுகடன் பயிர் காப்பீடு ஆகியவற்றை விவசாயிகளுக்கு செய்து தர வேண்டும். 


கார்ப்பரேட் நிறுவனங்கள் கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வதை தம் சமுதாய கடமையாக நினைக்க வேண்டும். 


தொலைத் தொடர்பு யுகம் என்று நாம் பெருமை கொள்வது உண்மை எனில் இதுவரை பயன்படுத்தாத மக்களை நாம் அணுக செய்ய வேண்டும். 


இதுதான் கலாம் சொல்லும் “இந்தியா - 2020”. இதனை நாம் பின்பற்ற வழி காண்போம்.